Friday, June 5, 2015

பாபம் என்று கார்யமாகப் பண்ணியதைப் போக்கடிக்க நாம கீர்த்தனம் என்ற கார்யத்தைப் பண்ணியாக வேண்டும்

Nama Article 2nd June 2015

Source: Deivathin Kural - Sri Sri Chandrasekharendra Saraswati [Maha Periyava] of Kaanchi Kaamakoti Peetam

ஜன்ம விமோசனமே அளிப்பது

பாகவதத்தின் முடிவிலே முடிந்த முடிவாக ச்லோகம் இருக்கிறது:


நாம ஸங்கீர்த்தநம் யஸ்ய ஸர்வபாப-ப்ரணாசநம் |

ப்ரணாமோ து:கசமநஸ்-தம் நமாமி ஹரிம் பரம் ||


'நாமம்' என்று முன்பாதி ஆரம்பம்; 'ப்ர-நாமம்' (ப்ரணாம) என்று பின்பாதி ஆரம்பம்; நடுவிலே 'ப்ர-நாசம்' (ப்ரணாசனம்). 'நாமம்-ப்ரணாமம்-ப்ரணாசம்' அழகான சப்த ஜாலம்!

அது இருக்கட்டும். அர்த்த விசேஷம், குறிப்பாக நமஸ்கார விசேஷம், பார்க்கலாம்.


பரவஸ்துவான ஹரியுடைய நாம ஸங்கீர்த்தனம் ஸகல பாபத்தையும் நன்றாக நசிப்பிக்கிறது என்று முன் பாதி சொல்கிறது. அதோடேயே க்ரந்தத்தைப் பூர்த்தி செய்திருக்கலாம். அதற்கு ஸகல ந்யாயமுமிருக்கிறது. ஆனால் அப்படி முடிக்காமல் நமஸ்கார மஹிமையைப் பின் பாதியாகச் சொல்லியே பூர்த்தி செய்திருக்கிறது.

       ப்ரணாமோ து:கசமந:


'அவனுக்கு நமஸ்காரம் பண்ணுவது துக்கத்தை சமனம் செய்கிறது. ஸகல துக்கத்தையும் போக்குகிறது'.

      தம் நமாமி ஹரிம் பரம்

'ஆகையினால் பரவஸ்துவான அந்த ஹரியை நமஸ்காரம் பண்ணுகிறேன்.'


'எந்தப் பரவஸ்துவான ஹரியின் நாம கீர்த்தனம் ஸகல பாபத்தையும் நசிப்பிக்குமோ, எவனை நமஸ்கரிப்பது துக்கத்தைப் போக்குமோ, அவனை நமஸ்கரிக்கிறேன்' என்று முழு ச்லோக அர்த்தம்.

பாபம் போனாலே துக்கமும் போகாதா என்றால் பாபம் போனால் ரொம்பவும் தார்மிகமாக, நேர்மையாக இருந்து கொண்டிருக்கலாம். ஆனால் அதுவே துக்க சமனம் இல்லை. என்ன துக்கம்? அவனோடு சேரவில்லையே என்ற துக்கந்தான். அவனோடு சேராத மட்டும், அவனிடமிருந்து பிரிந்து வந்த ஜீவனுக்கு அடிமனஸில் துக்கந்தான். தர்மமாக, righteous-ஆக, நல்லொழுக்க morality-யோடு வாழுவதால் மாத்திரம் நிறைவு கண்டுவிட முடியாது. நிறைவு இல்லை என்றால் குறைவுதான். குறை என்றால் துக்கந்தானே? அது அவனோடு கலந்தாலொழியத் தீராது. அதை அளிக்கவல்லது நமஸ்காரந்தான்.    இதையே ச்லோகம் சொல்கிறது.


நாம கீர்த்தனம் என்று கார்யமாகப் பண்ணுவதெல்லாமும் ஓய்ந்து போய் ஒன்றும் பண்ணாமல் சரணாகதி என்று விழுவது நமஸ்காரத்தில்தான். அதனால் தான் அதற்கே அத்யுன்னத (அதி உன்னத) ஸ்தானம் தந்து ஸ்ரீமத்பாகவதத்தை சுகாசார்யாள் பூர்த்தி செய்திருக்கிறார்.

பாபம் என்று கார்யமாகப் பண்ணியதைப் போக்கடிக்க நாம கீர்த்தனம் என்ற கார்யத்தைப் பண்ணியாக வேண்டும். அப்படிப் பாபத்தைப் போக்கிக் கொண்டால்தான் அவனைச் சேருகிற தாபம் நன்றாக மூண்டு, அப்புறம் "நாமாகச் சேர முடியாது. அவன் தான் சேர்த்துக் கொள்ளணும். அது அவன் கார்யந்தான். அவனுடைய கார்யம் மாத்ரமேதான். நாம் கார்யமேயில்லாமல் சரணாகதி என்று கிடந்தால்தான் அவன் அந்தக் கார்யத்தைப் பண்ணுவான்" என்ற ஞானம் பிறந்து, சரணாகதிக்கே க்ரியையாக – நம்முடைய கடைசிக் கார்யமாக – அவன் காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணி அப்படியே கிடப்போம்.


இது பாகவதத்தின் கடைசி ச்லோகம். கீதையின் கடைசி ச்லோகத்தில்* பாகவதத்தின் நாயகனாக உள்ள அந்த பகவானே அர்ஜுனனை – அதாவது ஸகல ஜீவ லோகத்தையும் – சரணாகதிதான் பண்ணச் சொல்கிறார். அப்படிப் பண்ணினால்,


"அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி"


"நான் உன்னை எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்" என்கிறார். அதுதான் பாகவதத்தில் நாம் பார்த்த 'ஸர்வ பாப ப்ரணாசனம்'.


*18.66 இதற்குப் பிறகும் சில ச்லோகங்கள் இருப்பினும் இதுவே பகவானுடைய உபதேசம் முடியும் ச்லோகம்.


அப்புறம் பகவானின் முடிவான மங்கள்வாக்காக


"மா சுச:"

"துக்கப்படாதேப்பா!" என்கிறார். பாகவதத்தில் பார்த்த 'து:க சமனம்'.


சரணாகதி சாஸ்திரமாகவே பாகவதத்தையும் முடிக்க வேண்டும் என்று சுகாசார்யாள் பண்ணினபோது, அதைக் குறிப்பிட நமஸ்காரத்தையே சொல்லியிருக்கிறார்.


எதைவிட பெரிய பலன் இல்லையோ அந்த பகவத் ஐக்கியத்தையே நமஸ்காரம் – நிஜமான நமஸ்காரம் – கொடுத்துவிடுகிறது.


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: