Friday, November 1, 2024

பகவந்நாமம் அதிலும் குறிப்பாக மகாமந்திர கீர்த்தனமே கலியுகத்திற்கு சால உகந்தது என்று நம் வேதமும் கூறுகின்றது

 

திருநாங்கூர் நாம சப்தாஹத்தில் பங்கேற்ற அன்பர்களுக்கு ஶ்ரீ ஸ்வாமிஜியின் அருளுரை


ராதே ராதே!


நாம் ஒரு கோயிலிற்குச் செல்லுகிறோம். அங்கு கோயில்கொண்டுள்ள பகவானுக்கு அர்ச்சனை செய்ய ஒரு அர்ச்சனைத்தட்டு எடுத்துச்செல்லுகின்றோம். அந்த கோயிலிலுள்ள ஒரு அர்ச்சகர் நம் சார்பாக சங்கல்பம் செய்து, பகவானுக்கு அர்ச்சனை செய்கிறார். அச்சமயம் நாம் அங்கு எதும் செய்யாமல் இருப்போம். பலன் மட்டும் நமக்கு வந்து சேர்ந்துவிடும். இதேபோல்தான் ஒரு ஹோமமும் வேள்வியும்.


இது இப்படியிருக்க நம்மில் சிலருக்கு நாமும் ஒரு பூஜையை இறைவனுக்குச் செய்யவேண்டும்; நாமும் நேரடியாக பகவானுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆசைவரும். நாம் இப்படி ஆசைப்படும் இந்த பூஜையும் செய்வதற்கு சுலபமாக இருக்கவேண்டும்; அதன் பலனோ உயர்ந்ததாகவும் இருக்கவேண்டும் என்றும் எதிர்பார்ப்போம். 


இப்படிப்பட்ட உயர்ந்த பூஜை – பகவந்நாம கீர்த்தனமே! நாமமே உயர்ந்த வழிபாடு. 


ஜகத்குரு ஶ்ரீ பகவந்நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும், “பகவந்நாம கீர்த்தனமே, அல்பமான பிரயத்தினம் (முயற்சி) ஆயினும் அனல்பமான பலன், அதாவது மிகப்பெரிதான ஒரு பலனைத் தரும்” என்று கூறுகிறார்.


பகவந்நாமம் அதிலும் குறிப்பாக மகாமந்திர கீர்த்தனமே கலியுகத்திற்கு சால உகந்தது என்று நம் வேதமும் கூறுகின்றது. அன்மையில் திருநாங்கூரில் சிறப்பாக நடந்தேரிய மகாமந்திரகீர்த்தன சப்தாஹத்தில் நீங்கள் அனைவரும் வந்து கலந்துகொண்டதில் பேரானந்தம் அடைந்தோம். திருநாங்கூரில் ஏழு நாட்களும் விடாத நாமமழைதான் பொழிந்தது. 


ஒவ்வொரு நாளும், அதிகாலையில் ஆரம்பித்த அதே “ஜோர்”, பூர்த்திவரை சற்றும் தொய்வே அடையாமல் மாலைவரை நிலைத்தது! நீங்கள் அனைவரும் organized ஆக வந்து, பாங்காக மஹாமந்திரம் பாடி, ஒரு நொடியும் வீண்பொழுது போக்காமல் “நாமம், நாமம், நாமம்” என்றே இருந்தீர்கள். நீங்கள் நாமம் சொல்லும் அளவிற்கு ஈடுகொடுத்து என்னால் சொல்லமுடியவில்லையே என்றுகூட எனக்கு தோன்றியது. அவ்வளவு ‘Energetic’ ஆக இருந்தது.


ஒருமுறை நம் சத்குருநாதரான ஶ்ரீஶ்ரீ அண்ணா அவர்கள் திருநாங்கூர் பதினோரு கருட சேவைக்கு சென்றுவந்து என்னிடம், “பதினோரு திவ்யதேசத்து எல்லா பெருமாளும் வந்தார், ஆழ்வார் வந்தார். எல்லாம் இருந்தது ; ஆனால் நாமசங்கீர்த்தனம் மட்டும் இல்லை.” என்று கூறினார். இம்முறை அவர் நெஞ்சம் குளிரும்படி அங்கு நாம மழைதான் பொழிந்தது. நம் குருநாதரின் உள்ளம் குளிர்ந்தது என்றாலே, அந்தந்த திவ்யதேச பெருமாளும் நாமசப்தாஹத்தால் சந்தோஷம் அடைந்திருப்பார்கள்.


பகவான் தன் இணையற்ற அருளால் பங்குகொண்ட உங்கள் அனைவருக்கும் எல்லா நன்மைகளும் ஆசீர்வதிக்கட்டும். எல்லா குறைகளும் நீங்கி, நீண்ட ஆயுளும், சீரான உடல் – மன ஆரோக்யமும், செழிப்பும், மேலும் மேலும் இதுபோன்ற சத்சங்கங்களும், நாமருசியையும் குறையொன்றும் இல்லாத கோவிந்தன் அருளட்டும்.


அனைவர்க்கும் தீபாவளி சுபதின நல்வாழ்த்துக்கள்.


ராதே ராதே!

மஹாரண்யம் ஶ்ரீ முரளீதர ஸ்வாமிகள்