Saturday, November 30, 2024

அமுதக்கடல் பொங்கி ஸ்ரீபூரி ஜகன்னாதர் தேரோடும் வீதிகளில் ஓடிற்று ஐயன்மீரே

 அமுதக்கடல் பொங்கி ஸ்ரீபூரி ஜகன்னாதர் தேரோடும் வீதிகளில் ஓடிற்று ஐயன்மீரே…

நவம்பர் 25, 2024
இந்நாள் நமது சத்சங்கத்தின் பல்லாயிர அன்பர்களின் மனதில் நீங்காது நிறைந்து நிற்கும் நாளானது.

காலை 7.30மணி அளவில் பூரி ஸ்ரீஜகன்னாதர் ஆலய சிம்மத்வாரத்தின் வெளியிலுள்ள பெருவீதியில், பெரிய நகரகீர்த்தனம் நிகழ்த்துவது என ஸ்ரீஸ்வாமிஜி அறிவித்து இருந்தார்கள்.

ஸ்ரீஸ்வாமிஜி அவர்களுடன், அதுவும் பூரியில், மேலும் ஸ்ரீஜகன்னாதரின் காலடியிலே கீர்த்தனம் செய்ய ஆவலுடனும், பக்தியுடனும் ஸ்ரீஜகன்னாதர் ஆலய கிழக்கு கோபுரவாசல் வெளியே சுமார் இரண்டாயிரம் பக்தர்கள் காலையில் அதுபடி குழுமினர்.

ஸ்ரீஸ்வாமிஜி அவர்களும் ஜகன்னாதரின் ஒரு Shawlஐ(ஷால்) மேலே போர்த்தியவாறும் ஒரு புது பூமாலை அணிந்தபடியும் குறித்த நேரத்தில் வந்தார்.

ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட நம் சத்சங்க சகோதரர்களும் சகோதரிகளும் கட்டுக்கோப்பாக ஓரோர் புறமாக நின்று வந்தபடி, இதயத்தில் அன்புடனும் நாவில் நாமத்துடனும் ஸ்ரீஸ்வாமிஜியுடன் சேர்ந்து கீர்த்தனம் செய்து நகர்ந்து வந்தது அருமையான காட்சி.

சிக்ஷாஷ்டக சுலோகம் ஒன்றை பாடி ஆரம்பித்தார் ஸ்ரீஸ்வாமிஜி. அதன்பின் முழுக்க மகாமந்திர அமுதமழைதான் தெருவில் பொழிந்தது என சொல்ல வேண்டும்.

ஸ்ரீஸ்வாமிஜியும் இயல்பாக மகாமந்திர தாளத்திற்கேற்றபடி ஆடிக் கொண்டே வந்தார்.

ஸ்ரீஸ்வாமிஜி பாடினார்; ஆடினார்; கரத்தாளமிட்டார்; குதித்தார்; சுழன்றார்; சுற்றினார்; உருண்டார்; பக்தபாவாவேசங்களில் மூழ்கினார்; அங்கிருந்தவர்களுக்கும் தெய்வீக பரவசம் தந்தார். அங்கு குழுமி இருந்தோர்மேல் ஒரு ஆனந்த அலை வீசியது.

யூடியூபில் நேரலையாக ஔிபரப்பு செய்யப்பட்ட இந்த நகரகீர்த்தனையை கண்ணுற்ற எண்ணற்றோரும் அந்த தெய்வீக ஆனந்த சுகம் அனுபவித்தனர்.

மகாமந்திர நகரகீர்த்தனம் கோவிலின் வெளிவீதிகளை வலம் வந்து பூர்த்தியாக, ஒரு தேவ ரகசியத்தை ஸ்ரீஸ்வாமிஜி அன்பர்களுடன் பரிவுடன் பகிர்ந்துகொண்டார்.

நவம்பர் 2007 வாக்கில் நமது ஸ்ரீஸ்ரீ அண்ணா அவர்கள் பல பக்தர்களை வங்காளத்திலுள்ள நவத்வீபத்திற்கு ஒரு பாகவத சப்தாஹத்திற்காக அழைத்து சென்றிருந்தார். அப்பொழுது ஸ்ரீஸ்ரீ அண்ணா அவர்கள் யாத்திரை சென்றபொழுதெல்லாம் ஸ்ரீஸ்வாமிஜி நம் சத்சங்க அன்பர் ஸ்ரீவெங்கடேசனை அனுப்பிவைப்பது வழக்கம். அம்முறையும் ஸ்ரீவெங்கடேசனை ஸ்ரீஸ்வாமிஜி அனுப்பி வைத்து இருந்தார்.

நவத்வீபத்திலே ஒருநாள் ஸ்ரீவெங்கடேசனை அருகில் அழைத்த ஸ்ரீஸ்ரீ அண்ணா அவர்கள், “நான் ஒரு தெய்வீக ஸ்வப்னம் கண்டேன். அதில் ஸ்ரீபூரிஜகன்னாதர் கோவில் வீதிகளில் ஸ்ரீமுரளீதர ஸ்வாமிஜி மகாமந்திர கீர்த்தனையை பாக்யவான்களான பல்லாயிரம் அன்பர்களுடன் சேர்ந்து நகரகீர்த்தனமாக செய்வதை பார்த்தேன். இது விரைவில் நடக்கும்” என்றார்.

அந்த பாக்ய-நிகழ்வு இதுவே!
அந்த பாக்ய-தினம் இன்று!
அந்த பாக்ய-அன்பர்கள் இவர்களே!

ஜய் ஜகன்னாத் !!

No comments: