Saturday, November 30, 2024

திருநாங்கூர் க்ஷேத்ரத்தில் நாம ஸப்தாகம்! அக்டோபர் 22 2024 முதல் அக்டோபர் 28 2024

 

திருநாங்கூர் க்ஷேத்ரத்தில் நாம ஸப்தாகம்!

நாமனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து வேள்வியோடு ஆறங்கம் நவின்று கலை பயின்று அங்கு ஆமனத்து மறையவர்கள் பயிலுமணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மடநெஞ்சே!

என்ற பாசுரத்தை ஒட்டி, திருநாங்கூர் திவ்ய க்ஷேத்ரத்தில், ஸ்ரீமதி ஜெயந்தி ஜானகிராமன் நினைவு வேத ஆகம பாடசாலை ஸ்ரீ ஸ்வாமிஜியால் 2001ம் ஆண்டு ஸ்தாபிக்கபட்டது. நமது ஸத்குருநாதர் ஸ்ரீ ஸ்ரீ அண்ணாவின் மனோரதத்தை ஒட்டி இங்குள்ள 11 திவ்ய தேசங்களும் நமது அறக்கட்டளையால் திருப்பணி செய்யப்பட்டு, சம்ப்ரோக்ஷணம் நடந்து , நித்ய ஆராதன கைங்கர்யம் செய்யப்படுகிறது. மேலும் இந்த பகுதிகளில் நமது உயிர் மூச்சான நாம பிரச்சாரமும் நடைபெறுகிறது. இயன்ற அளவில் சமூக பணிகளும் செய்து, ஒரு சிறிய கோசாலையும் நடக்கிறது. இப்படி ஸ்ரீ ஸ்வாமிஜியின் அனைத்து கார்யங்களும் ஒருங்கே நடைபெறும் க்ஷேத்ரமான திருநாங்கூரில் ஸ்ரீ ஸ்வாமிஜியின் 64வது திருநக்ஷத்திர தினமான ஐப்பசி ஸ்வாதியை ஒட்டி நாம ஸப்தாகமும், அங்குள்ள திவ்ய தேசங்களில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், திருவாராதனமும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அக்டோபர் 22 2024 முதல் அக்டோபர் 28 2024 வரை இந்த மஹோத்சவம் சீரிய முறையில் நடைபெற்றது. தினமும் காலை 6 முதல் மாலை 6 வரை இடைவிடாத அகண்ட மஹாமந்திர கீர்த்தனம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் பல நாமத்வார்களிலிருந்து 400க்கும் மேற்பட்ட நாம குடும்ப அங்கத்தினர்கள் கலந்து கொணடு நாம மழை பொழிந்தனர்! திவ்ய நாம கிருஷ்ணரை பிரதக்ஷணம் வந்து உற்சாகமாக, தொய்வில்லாமல் ஆனந்த கீர்த்தனம் செய்தனர்! ஒரு நாள் அதிகாலையில் ஸ்ரீ ஸ்வாமிஜி முன்னிலையில் நகர சங்கீர்த்தனமும் நடைபெற்றது. ஒரு நாள் நாம மழையுடன் வான் மழையும் சேர, ஸ்ரீ வைகுண்டநாதர் ஆலயத்தில் ஸ்ரீ ஸ்வாமிஜியும் பக்தர்களும் ஆனந்த கூத்தாடினர்!

ஒவ்வொரு நாளும் ஒரு திவ்ய தேசத்தில், ஸ்ரீ பெருமாளும், ஸ்ரீ தாயாரும் திருமஞ்சனமும், திருவாராதனமும் கண்டருளினர். வேத கோஷம் முழங்க, பாசுரங்கள் சேவிக்கப்பட்டு, மதுரகீத பஜனை மற்றும் நாம கோஷத்துடன் இந்த வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சில நாட்களில் கல்யாண உற்சவமும், புறப்பாடும் நடைபெற்றது.

தினமும் காலையில், வந்திருந்த நமது நாமத்வார் அன்பர்கள் திவ்ய தேச யாத்ரை சென்றனர். அவர்களுக்கு ஸ்தல வரலாறு சொல்லப்பட்டு, நாம் அங்கு செய்த கைங்கர்ய விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் நாங்கூர் திவ்ய தேசங்கள் பற்றிய கையேடு கொடுக்கப்பட்டது. வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் ஸ்ரீ ஸ்வாமிஜி தரிசனம் தந்து பிரஸாதம் வழங்கினார். அனைத்து தினங்களிலும் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அறுசுவை பிரசாதம் வழங்கப்பட்டது.

கலந்து கொண்ட அனைவரும் ஸ்ரீ ஸ்வாமிஜியின் தரிசனம், திவ்ய தேச யாத்ரை, திவ்ய தேச ஆராதனம், நாம சங்கீர்த்தனம், அருமையான பிரசாதம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர். இவ்வளவு விமர்சையான இந்த வைபவம் எந்த விதமான தொய்வும் இல்லாமல் செவ்வனே நடந்தது, பகவத் மற்றும் குரு கிருபையால் மட்டுமே சத்தியமாயிற்று. ஏற்பாடு செய்த மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஸ்ரீ ஸ்வாமிஜி தனது ஆசிகளை தெரிவித்தார்! இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கும், இதை அழகாக நடத்திய நமது நாங்கூர் பாடசாலை நிர்வாகத்திற்கும், GOD India Trust தன்னார்வலர்களுக்கும் நமது வந்தனங்கள்!

No comments: